மணிப்பூர் கலவர சம்பவம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: பாஜக எம்எல்ஏ வீடு மீது குண்டு வீச்சு

இம்பால்: மணிப்பூர் கலவர சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் வீட்டை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்கினர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கும் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது. அப்போது நடந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை அமித் ஷா அங்கு முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தினார். இந்நிலையில், மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா? என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3,734 வழக்குகளில் 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்க மணிப்பூர் அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையே நேற்றிரவு நவுரியா பகாங்லாக்பா சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ வீட்டின் மீது மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியது. இந்த சம்பவத்தால் எம்எல்ஏ வீட்டின் கேட் சேதமடைந்தது. எனினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இருவர் வெடிகுண்டை வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவர்களை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.

The post மணிப்பூர் கலவர சம்பவம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: பாஜக எம்எல்ஏ வீடு மீது குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: