புறப்படுவதற்கு தாமதமானதால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கொடுத்த புகாரில் ஆண் பயணி மீது வழக்கு

புதுடெல்லி: விமானம் புறப்படுவதற்கு தாமதமானதால் மும்பை நோக்கி புறப்பட தயாரான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆண் பயணி மீது வழக்குபதியப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விஸ்தரா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் விமானம் புறப்படாததால், விமான பயணி ஒருவர் வேறொரு நபரிடம் போனில் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பேசியுள்ளார். அதைகேட்ட மற்றொரு பெண் பயணி அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளிடம், சந்தேக பயணி போனில் பேசியது குறித்து கூறினார்.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு, உளவுத்துறை, விமான நிலைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விமானத்தை பரிசோதித்தனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு போன்ற ெபாருட்கள் கண்டறியப்படவில்லை. பயணிகளிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. வெடிகுண்டு புரளியால், கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் 163 பயணிகளுடன் மும்பைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புகாரளித்த பெண் மற்றும் போனில் பேசிய ஆண் பயணி ஆகிய இருவரும் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் ஆண் பயணி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341 மற்றும் 268-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புறப்படுவதற்கு தாமதமானதால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கொடுத்த புகாரில் ஆண் பயணி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: