மோடியின் நிழலாக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் மருமகனின் பின்னணி என்ன?: நிதியமைச்சக வட்டாரங்கள் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் நிழலாக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் மருமகனும், குஜராத்தை சேர்ந்தவருமான பிரதீக் தோஷி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்றிய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் தோஷி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் எளிமையான முறையில் வீட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், ஒன்றிய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை அரசியல் ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயியை திருமணம் செய்து கொண்ட பிரதீக் தோஷி என்பவர் யார்? நிர்மலா சீதாராமனின் மருமகனாகி உள்ள அவரது பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான பிரதீக் தோஷி, ஒன்றிய அரசின் வணிக ஒதுக்கீடு விதிகள், 1961-இன் அடிப்படையில் பிரதமர் அலுவலக செயலக ஆராய்ச்சி மற்றும் வியூகங்களை வகுப்பதற்காக சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஜூனில் இணை செயலாளாராக பிரதீக் தோஷி பதவி உயர்வு பெற்றார்.

சிங்கப்பூரின் மேலாண்மைப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநில முதல்வர் அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஆராய்ச்சி மற்றும் வியூகப் பிரிவைக் கவனித்து வருகிறார். பிரதமர் மோடிக்கு தேவையான உள்ளீடுகளை சேகரித்து கொடுப்பதில் வல்லவர். அவரின் நிழலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தேவையான உள்ளீடுகளையும், கருத்துக்களையும் அவர் அளித்து வருகிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயி, மிண்ட் லவுஞ்சின் புத்தகங்கள் மற்றும் கலாசாரப் பிரிவில் சிறப்பு எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மோடியின் நிழலாக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் மருமகனின் பின்னணி என்ன?: நிதியமைச்சக வட்டாரங்கள் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: