மூங்கில் பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தல்

தர்மபுரி : மூங்கில் பொருட்களை பயன்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தினர். வேளாண் சாகுபடியிலும், வீட்டு உபயோகத்துக்கும், மூங்கிலால் ஆன கூடை உள்பட பல்வேறு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததும், மூங்கில் பொருட்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. தற்போது பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதால், மூங்கில் பொருட்களுக்கு மீண்டும் தேவை அதிகரித்துள்ளது.

மூங்கில் கீற்றுகளை கொண்டு அழகிய, நேர்த்தியான பல்வேறு வடிவங்களில் கூடை தயாரிக்கின்றனர். கடந்த காலங்களில் தமிழர்களின் தினசரி வாழ்க்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக்கூடை, பூஜைக்கூடை, விவசாயக்கூடை, எருக்கூடை என பல்வேறு வடிவங்களில் தயாரித்தனர். இவற்றை மக்கள் காய்கறி எடுத்து செல்லவும், கோழிகளை மூடி வைப்பதற்கும், கோயில்களுக்கு பூஜை பொருட்கள் எடுத்து செல்வதற்கும், பூக்களை விற்பதற்கும், சமைத்த சாதத்தை வடிப்பதற்கும் பயன்படுத்தினர்.

இன்னும் இதன் பயன்பாடுகள் பலவகைகளில் இருந்தன. திருமண நிகழ்ச்சியில் உப்பு மாற்றும் சடங்கில் மூங்கில் கூடை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை தேடிச்சென்ற மக்கள், மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மூங்கில் பொருட்களை பயன்படுத்த தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி சந்தைபேட்டை, ஏமகுட்டியூர் பகுதியில் மூங்கில் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இப்பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மூங்கில் பொருட்கள் விலையைவிட பிளாஸ்டிக் பொருட்களின் விலை குறைவு என்றாலும், மனிதனுக்கும் மண்ணுக்கும் தீங்கு விளைவிக்காத பொருட்கள் என்பதால் மூங்கில் தயாரிப்பு பொருட்களை வாங்க மக்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
முன்பு கிராம பகுதியில் வசிக்கும் மக்களே அதிகமாக மூங்கில் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது நகரப்பகுதியில் வசிப்பவர்களும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை வைத்து மூங்கில் பொருட்களை வாங்குகின்றனர். இதேபோன்ற நிலை தொடர்ந்தால் மூங்கில் கூடை பின்னும் தொழில் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உருவாகும். எனவே, உலக சுற்றுச்சூழல் தினத்தை ஜூன் 5ம் தேதியை முன்னிட்டு, பாரம்பரியமான மூங்கில் பொருட்களை பயன்படுத்த மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மூங்கில் பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: