மணலி மண்டலத்தில் ₹15 கோடியில் திட்ட பணிகள்: கூட்டத்தில் தீர்மானம்

திருவொற்றியூர்,: மணலி மண்டலக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மக்கள் திட்டங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர். இதில் கவுன்சிலர் நந்தினி சண்முகம் பேசும்போது, எனது வார்டில் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தர வேண்டும், என்றார். கவுன்சிலர் ராஜேந்திரன் பேசும்போது, குடிநீர், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

கவின்சிலர் தர் பேசும்போது, சிபிசிஎல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும், என்றார். கவுன்சிலர் காசிநாதன் பேசும்போது, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பூங்காவிற்கு கலைஞரின் நூற்றாண்டு பூங்கா என பெயர் வைக்க வேண்டும், என்றார். கவுன்சிலர் ராஜேஷ் சேகர் பேசும்போது, இ-சேவை மையங்களில் அலுவலர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், என்றார். கவுன்சிலர் தீர்த்தி பேசும்போது, அதிகளவில் நோயாளிகள் வரும் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உதவியாளரை நியமிக்க வேண்டும், என்றார்.

இதற்கு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பதில் அளித்து பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்,’’ என்றார். அதனைத் தொடர்ந்து மணலி மண்டலத்தில் ₹15 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மணலி மண்டலத்தில் ₹15 கோடியில் திட்ட பணிகள்: கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: