ஏ.சி.யில் மின் கசிவு காரணமாக தொழிலதிபர் வீட்டில் தீ விபத்து: குடும்பத்துடன் உயிர் தப்பினார்

சென்னை: தி.நகர் யோகாம்பாள் தெருவை சேர்ந்தவர் பிரமோத் சால்டா (48). தொழிலதிபரான இவர், கட்டில், மெத்தை மொத்த விற்பனை செய்து வருகிறார். கடந்த வாரம் முழுவதும் இவரது வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதனால் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 ஆயிரம் சதுரஅடி கொண்ட முதல் மாடியில் உள்ள வீட்டில் தொழிலதிபர் பிரமோத் சால்டா, குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்கள் என 8 பேர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் தொழிலதிபரின் படுக்கை அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த அவர், தனது குடும்பத்தினரை உடனே வெளியேற்றினார். அதற்குள் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. தகவலறிந்த தி.நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில், தேனாம்பேட்டை, அசோக் நகர் பகுதியில் இருந்து 15 தீயணைப்பு வீரர்களுடன் விபத்து நடந்த வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 500 சதுரஅடி கொண்ட படுக்கை அறையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஏசியில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

The post ஏ.சி.யில் மின் கசிவு காரணமாக தொழிலதிபர் வீட்டில் தீ விபத்து: குடும்பத்துடன் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: