கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ₹33.73 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

நாமக்கல், ஜூன் 9: கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ₹33.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை, காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐடிஐ முடித்து செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற, முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை, தமிழ்நாட்டின் இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ₹2877 கோடியே 43 லட்சத்தில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்., நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. நாமக்கல்லை அடுத்துள்ள கீரம்பூரில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ₹33.73 கோடி மதிப்பீட்டில் 4.0 தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலிக காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் குத்து விளக்கேற்றிவைத்தனர்.

கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தின் மூலம், தற்போது பயிற்சி பெற்று வரும் 176 மாணவ, மாணவிகளுடன் கூடுதலாக 104 மாணவ, மாணவியர் பயனடைவார்கள். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர்(பொ) செல்வம், அட்மாகுழு தலைவர் பழனிவேல், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், தொழிற்பயிற்சி நிலையம் இளநிலை பயிற்சி அலுவலர் ரவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்பயிற்சி நிலையம் பயிற்றுநர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

The post கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ₹33.73 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: