நாமக்கல் அருகே சாலைமேம்பாட்டு பணிகள் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

நாமக்கல், ஜூன் 9: நாமக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம், பல்வேறு இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இது போல பல இடங்களில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் முடிந்துள்ளது. இந்த பணிகளை சேலம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேற்று நாமக்கல் வந்து ஆய்வு செய்தார். நாமக்கல்- திருச்செங்கோடு 4 வழிச்சாலையில், எர்ணாபுரத்தில் இருந்து நல்லிபாளையம் பைபாஸ் மேம்பாலம் வரை 4 கி.மீ தூரத்துக்கு சாலை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் முடிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என்பதை அறிய சாலையை தோண்டி பார்த்தார். பின்னர் அதன் தரம் குறித்து அதற்கான கருவி மூலம் சோதனை செய்து பார்த்தார். இது போல பரமத்தி பகுதியில் நல்லூர் கபிலர்மலை இடையே அமைக்கப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளையும், அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலையோரம் மரக்கன்று நடும் பணியை துவக்கிவைத்தார். ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட, மரகன்றுகள் பராமரிக்கப்படும் விதத்தை நேரில் சென்று பார்வையிட்ட கண்காணிப்பு பொறியாளர், மரகன்றுகளை தொடர்ந்து நல்லமுறையில் பராமரிக்கும்படி சாலை ஆய்வாளர்களை கேட்டுகொண்டார். மேலும் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கோட்ட பொறியாளர் குணா, உதவி கோட்டப் பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post நாமக்கல் அருகே சாலைமேம்பாட்டு பணிகள் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: