சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புதுப்பிக்க ₹17 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் பொறியாளகள் குழுவினர்அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 17 பாரம்பரிய கட்டிடங்கள் ₹100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி 17 கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியது. இந்நிலையில், சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலை புதுப்பிக்க பொதுப்பணித்துறை ₹17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்:
ராஜாஜி ஹால் புனரமைக்க டெண்டர் பணி முடிந்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் அதன் அமைப்பு மாறாமல் புதுப்பிக்க உள்ளோம். ராஜாஜி ஹால் கட்டப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே கட்டிடக் கலை பாணியில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது.

குறிப்பாக சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறையே பயன்படுத்தப்படும். சுண்ணாம்பு கலவையுடன் கடுக்காய், வெல்லம், நாட்டுக் கோழி முட்டை, கற்றாழை ஆகியவை கலந்து சுமார் 15 நாட்கள் ஊறவைக்கப்படுகிறது. இதுபோன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை, 100 சதவீதம் தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். இந்த பணிகள் தொடங்கி 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புதுப்பிக்க ₹17 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: