பல ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 120 பேருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடித்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் உட்பட 120 காவல் அதிகாரிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் கமிஷனராக மகேஸ்வரி உள்ளார். துணை கமிஷனர் நாகஜோதி தலைமையில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு 1ன் கீழ் சீட்டு மோசடி, கந்து வட்டி, போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த பிரிவினர் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான போலி பாஸ்போர்ட் தொடர்பான 236 வழக்குகளை விரைவாக முடித்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த குற்வாளிகள் அவர்களது சொந்த ஊர் மற்றும் சொந்த நாடுகள் செல்ல 175 வழக்குகளின் முன் அனுமதி ஆணைகள் பெற்றனர். இதற்காக இந்த பிரிவினரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு சான்று மற்றும் வெகுமதி வழங்கினார்.

அதேபோல், மத்திய குற்றப்பிரிவு -2 துணை கமிஷனர் மீனா, 3வது பிரிவு துணை கமிஷனர் ஸ்டாலின், சைபர் க்ரைம் கூடுதல் கமிஷனர் ஷாஜிதா மற்றும் போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஜாகீர் உசேன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது ெசய்த ரவுடிகளுக்கு எதிரான பிரிவு மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் உட்பட சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் 3 துணை கமிஷனர்கள், 4 கூடுதல் கமிஷனர்கள், 8 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 27 எஸ்ஐக்கள், 8 சிறப்பு எஸ்ஐக்கள், 58 காவலர்கள் என மொத்தம் 120 காவல் அதிகாரிகளை நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பல ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 120 பேருக்கு கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: