கொல்லிமலை சென்ற சென்னை தொழிலதிபர் விடுதியில் மர்ம சாவு

சென்னை: கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த சென்னை தொழிலதிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பூந்தமல்லி சோழ நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன் (56). சென்னை துறைமுகத்தில் பொருட்கள் எடுத்துச் செல்லும் புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திருமணம் நடந்தது. அதற்காக நேற்று முன்தினம் ரகுநாதன் நண்பர்கள் 4 பேருடன், ராசிபுரத்தில் நடந்த ஊழியர் திருமணத்திற்கு சென்று விட்டு கொல்லிமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து நண்பர்கள் நான்கு பேருடன் தங்கி இருந்தார்.

நேற்று காலை தனி அறையில் தங்கியிருந்த ரகுநாதன், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் ரகுநாதன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த ரகுநாதனுக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

The post கொல்லிமலை சென்ற சென்னை தொழிலதிபர் விடுதியில் மர்ம சாவு appeared first on Dinakaran.

Related Stories: