குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டதால் ஆத்திரம்; அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்று, 6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: காஞ்சிபுரம் அருகே குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டையிட்டதால், கணவனை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, 6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்தானம் (32). டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரின், மனைவி வேண்டா (26). இருவருக்கும் 1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில், வேண்டா 6 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். சந்தானம் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை, சந்தானம் குடித்துவிட்டு வந்து மனைவி வேண்டாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேண்டா, ஆவேசத்துடன் அங்கு கிடந்த அம்மிக்கல்லை தூக்கி சந்தானத்தின் தலையில் ஓங்கி போட்டுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், பலத்த படுகாயமடைந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட, மனைவி வேண்டா பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், 2 பேரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்தானத்திற்கு ஏற்கனவே முதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவரின் முதல் மனைவி சந்தானத்தின் உடன் பிறந்த அண்ணனுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சந்தானத்தை விட்டு விட்டு, சந்தானத்தின் அண்ணனுடன் கணவன் மனைவியாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், 2வதாக திருமணம் செய்துகொண்ட வேண்டா, இவரின் முதல் கணவர் இறந்துவிட்டதால், 2வதாக சந்தானத்துடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. மேலும் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டதால் ஆத்திரம்; அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்று, 6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: