அவசரத்துக்குதானே ஆம்புலன்ஸ் ஏன் இவ்வளவு சீக்கிரம்… நாளைக்கு வரலாமே… டிரைவரை வறுத்தெடுத்த அமைச்சர்

காலத்தாற் செய்த உதவி என்பது எல்லா வகையான உதவிகளுக்கும் பொருந்தும். அதிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு கோல்டன் ஹவர் எனப்படும் உரிய நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை அவர்கள் உயிர் பிழைக்க அவசியம். இந்த உதவி கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் ஆம்புலன்களின் தாமதத்தால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுவை காரைக்காலில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

காரைக்கால் அருகே நெடுங்காடு பிள்ளை தெருவாசல் பகுதியில் கோயில் பூசாரி முத்துக்குமார் (50), டூவீலரில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அப்போது அவ்வழியாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, காரை நிறுத்தி விசாரித்தார். ஆம்புலன்ஸ் வர தாமதமானது தெரியவந்தது.

இதையடுத்து தனது காரில், மருத்துவமனைக்கு பூசாரி முத்துக்குமாரை அழைத்து செல்லுமாறு தெரிவித்தார். அப்போது ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்ந்தது. ஆம்புலன்ஸ் டிரைவரை பார்த்து கோபமடைந்த அமைச்சர் சந்திரபிரியங்கா, ‘ஏன் இவ்வளவு சீக்கிரம் வருகிறீர்கள், நாளைக்கு வரலாமே… அவசரத்துக்குதானே ஆம்புலன்ஸ்… இப்படி தாமதமாக வருவதற்கு எதற்கு ஆம்புலன்ஸ்’ என சத்தம் போட்டார். இதன்பின் பூசாரியை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post அவசரத்துக்குதானே ஆம்புலன்ஸ் ஏன் இவ்வளவு சீக்கிரம்… நாளைக்கு வரலாமே… டிரைவரை வறுத்தெடுத்த அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: