ஒரு லட்சம் வாடகை பாக்கி தர ரூ.25,000 லஞ்சம் கேட்ட அதிகாரி: பொக்லைன் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

மன்னார்குடி: ஒரு லட்சம் வாடகை பாக்கி ரூ.25,000 லஞ்சம் கேட்ட நகராட்சி கமிஷனரை கண்டித்து பொக்லைன் இயந்திர உரிமையாளர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மரக்கடை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (35). கூத்தாநல்லூர் நகராட்சியில் கடந்த 4 மாதமாக ஒப்பந்த அடிப்படையில் தனது பொக்லைன் இயந்திரம் மூலம் பல்வேறு பணிகளை செய்தார். அந்த வகையில் அவருக்கு வாடகை பாக்கி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் நகராட்சி நிர்வாகம் தர வேண்டியிருந்தது. இத்தொகையை உடனடியாக விஜயராகவனுக்கு வழங்குமாறு ஆணையர் குமரிமன்னனிடம், நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பலமுறை கூறியும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இ தையடுத்து, ஆணையர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு விஜயராகவன் மனு அனுப்பினார். இதுகுறித்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் விசாரணை நடத்தி விஜயராகவனுக்கு வட்டியும் வாடகை பணத்தை கொடுக்க உத்தரவிட்டது. ஆனாலும் பணத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று விஜயராகவன், மனைவி ஜெய (26), குழந்தை சாய் வைஷ்ணவி (2) ஆகியோருடன் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது கேனில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர், வாடகை தொகையை விரைவில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

The post ஒரு லட்சம் வாடகை பாக்கி தர ரூ.25,000 லஞ்சம் கேட்ட அதிகாரி: பொக்லைன் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: