தானேயில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த காதலன்: தெரு நாய்களுக்கு இரையாக வீசிய கொடூரம்

தானே: தானேயில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலியை கொலை செய்து, உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து தெரு நாய்களுக்கு வீசிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை அருகே தானே மாவட்டம் மிராபயந்தரில் உள்ள கீதாநகரில் உள்ள கீதா ஆகாஷ் குடியிருப்பில்7வது மாடியில் வசிப்பவர் மனோஜ் சானே (56). இவருடைய தோழி சரஸ்வதி வைத்யா (32). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து போலீசுக்கு அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

போலீசார் உள்ளே சென்ற போது பெண்ணின் கால்கள் வெட்டப்பட்டு தனியாக கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மனோஜ் சானேவை மடக்கிப் பிடித்தனர். வீட்டில் உள்ள வாளி மற்றும் பாத்திரங்களில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சானேயை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சரஸ்வதிக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கொலை செய்துவிடுவேன் என்று சரஸ்வதியை மிரட்டினேன்.

அதற்கு பயந்த சரஸ்வதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிறகு தான் அவரது உடலை மறைக்க மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கி உடலை துண்டு துண்டாக வெட்டினேன். உடல் மேல் பகுதியை முதலில் வெட்டி துண்டுகளாக்கிய பின்னர் உடலை குக்கரில் வேக வைத்து எடுத்துச் சென்று நாய்களுக்கு இரையாக வீசினேன். இவ்வாறு தெரிவித்து உள்ளார். சில பாகங்களை சாக்கடையில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். உடலின் கீழ் பகுதியை அப்புறப்படுத்துவதற்குள் பிடிபட்டு விட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2 வாரங்களில் 2வது சம்பவம்
கடந்த வாரத்தில் மும்பை உத்தன் கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனது மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொலை செய்தது தெரியவந்தது. தற்போது 2வது சம்பவமாக காதலியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

15 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம்
15 ஆண்டுகளுக்கு முன்பு சானே வேலை பார்த்த போரிவலியில் உள்ள ரேஷன் கடையில் இருவரும் சந்தித்துள்ளனர். இருவரும் ஆதரவற்றவர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. இதனால் வயது வித்தியாசம் அதிகமாக இருந்த போதும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்பட்டனர். பின்னர், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர் என போலீசார் கூறினர்.

The post தானேயில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த காதலன்: தெரு நாய்களுக்கு இரையாக வீசிய கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: