குட்கா விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமை குழு தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி

சென்னை: தமிழ்நாடு அரசால் 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சாதாரணமாக அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு குட்கா பாக்கெட்டுகளை திமுக எம்எல்ஏக்கள் எடுத்து வந்து பேரவை தலைவரிடம் காட்டினர். இதையடுத்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டு பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படை தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை விசாரித்த தனி நீதிபதி அதையும் ரத்து செய்தார். இதுதொடர்பாக 2021ம் ஆண்டு சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்.எல்.ஏ.,க்களும், அப்போது பாஜவில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேல் முறையீட்டு மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வேண்டுமென்று வலியுறுத்த விரும்பவில்லை என்றனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post குட்கா விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமை குழு தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: