கேரளாவில் 4 நாள் தாமதமாக பருவமழை தொடங்கியது: இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இவ்வருடம் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது. இன்று 8 மாவட்டங்களுக்கும், நாளை 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வருடம்தோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். சில வருடங்களில் மே மாத இறுதியிலேயே மழை தொடங்குவது உண்டு. கடந்த வருடம் மே 29ம் தேதியும், 2021ல் மே 31ம் தேதியும், 2018ல் மே 29ம் தேதியும் பருவமழை தொடங்கியது.

கடந்த 2020ல் ஜூன் 1ம் தேதியும், 2019ல் மிகவும் தாமதமாக ஜூன் 8ம் தேதியும் கேரளாவில் பருவமழை பெய்யத் தொடங்கியது. இந்த வருடம் 3 நாள் தாமதமாக ஜூன் 4ம் தேதி தான் பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று 8 மாவட்டங்களுக்கும், நாளை 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கேரளாவில் சராசரி பருவமழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post கேரளாவில் 4 நாள் தாமதமாக பருவமழை தொடங்கியது: இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: