புதிய குடும்ப அட்டை பெற 19 இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது

சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 19 இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.

அதன்படி, ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (10ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதிய குடும்ப அட்டை பெற 19 இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: