50 சதவீத ₹2,000 நோட்டுகள் வந்துவிட்டன; ₹500 நோட்டுகள் திரும்ப பெறப்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டில் 50 சதவீதம் வங்கி கணக்கிற்கு திரும்பப் பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ரூ.500 நோட்டுகள் திரும்பப்பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என்று, பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக ₹500 மற்றும் ₹2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது மெதுவாக குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் 2000 ரூபாய் நோட்டு இனிமேல் செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 19ம் தேதி வெளியிட்டது. இவற்றை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளவும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்;
புழக்கத்தில் இருந்து ₹2,000 நோட்டு திரும்பப் பெறுவதாக அறிவித்து 20 நாட்களிலேயே ஏறக்குறைய 50 சதவீத நோட்டு திரும்பி வந்து விட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி ₹3.62 லட்சம் கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தன. தற்போது ₹1.80 லட்சம் கோடி நோட்டு திரும்பப் பெறப்பட்டு விட்டது. இதில் 85 சதவீத நோட்டுகள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நோட்டுகளை மாற்ற அவகாசம் இருந்தாலும், அதுவரை காத்திராமல் முன்கூட்டியே மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போது புழக்கத்தில் உள்ள ₹500 நோட்டை திரும்பப் பெறவோ? ₹1,000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்யவோ திட்டம் இல்லை’’ என்றார்.

ரெப்போ வட்டி மாற்றமில்லை; கடன் இஎம்ஐ உயராது
ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில் கடன் வட்டி உயர்வு உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதத்துக்கான கூட்டம் கடந்த 6ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2022 மே மாதம் முதல் 6 முறைகளில் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டு வந்தது. ஏப்ரல் மாதம் உயர்த்தப்படவில்லை. இந்த மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 2வது முறையாக வட்டி உயர்த்தப்படவில்லை. இதனால் கடன் இஎம்ஐ உயர வாய்ப்பில்லை. நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த ரிசர்வ் வங்கி, அதனை 5.1 சதவீதமாக குறைத்துள்ளது.

The post 50 சதவீத ₹2,000 நோட்டுகள் வந்துவிட்டன; ₹500 நோட்டுகள் திரும்ப பெறப்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: