கோடாலியால் வெட்டி 6 வயது சிறுமி கொலை: தந்தை வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 வயது சிறுமி கோடாலியால் வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (38). அவரது மனைவி வித்யா. இந்த தம்பதியின் மகள் நக்‌ஷத்ரா (6). இதற்கிடையே துபாயில் பணிபுரிந்து வந்த ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமகேஷின் தந்தை ஸ்ரீமுகுந்தன் ரயில் மோதி இறந்தார்.

அதைத்தொடர்ந்து தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் துபாய் செல்லவில்லை. இதற்கிடையே நேற்று இரவு ஸ்ரீமகேஷும், அவரது மகள் நக்‌ஷத்ராவும் வீட்டில் இருந்தனர். அவரது தாய் சுனந்தா (62) அருகில் உள்ள மகளின் வீட்டில் இருந்தார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்‌ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பதற்றம் அடைந்த சுனந்தா விரைந்து சென்று பார்த்தார். அப்போது, நக்‌ஷத்ரா சோபாவில் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது.

கையில் கோடாலியுடன் ஸ்ரீமகேஷ் ஆவேசமாக நின்று கொண்டு இருந்தார். திடீரென சுனந்தாவையும் அவர் கோடாலியால் வெட்டினார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்தனர். இதுகுறித்து மாவேலிக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து நக்‌ஷத்ராவையும், சுனந்தாவையும் மாவேலிக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நக்‌ஷத்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

சுனந்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீமகேஷை கைது செய்தனர். மனைவி மற்றும் தந்தையின் மரணத்தால் ஸ்ரீமகேஷுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதான் கொலைக்கு காரணமாக இருந்திருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.

The post கோடாலியால் வெட்டி 6 வயது சிறுமி கொலை: தந்தை வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: