சென்னை: ஜாமின் பெற்றவர்கள் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க காவல்நிலைய பதிவேடுகளை பராமரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக் டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதிய நிலையில் டிஜிபி ஆணையிட்டுள்ளார்.
ஒவ்வொரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கொண்ட ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். பதிவேட்டை கையாள 2-ம் நிலை அல்லது முதல் நிலை காவலர் அல்லது தலைமை காவலர் அந்தஸ்தில் ஒருவரை நியமிக்க வேண்டும். நிபந்தனைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ஜாமினை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவழக்கு ஒன்றில் ஜாமின் பெற்றவர் அதன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என உயர் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, ஜாமினை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மார்ச் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதுபோன்று நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டாம் நிலை காவலர் அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை என நியமிக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
The post ஜாமின் பெற்றவர்கள் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க காவல்நிலைய பதிவேடுகளை பராமரித்திடுக: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.