திருப்பதியில் ஏழுமலையான் கோயில் எதிரே நடிகையை கட்டிப்பிடித்து சரமாரி முத்தம் கொடுத்த இயக்குனர்: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: ராமாயணத்தை மையமாகக் கொண்டு 3 டி அனிமேஷனில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் 16ம்தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் திருப்பதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபாஸ் மற்றும் திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். நேற்று காலை ஆதிபுருஷ் படத்தின் இயக்குனர் ஓம்ராவத், சீதாதேவியாக நடித்த கதாநாயகி கீர்த்திசனோன், இசையமைப்பாளர் அஜய்அடுல் ஆகியோர் ஏழுமலையானுக்கு நடைபெறும் அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் திரைப்பட குழுவினர் கோயிலுக்கு வெளியே வந்தனர். அப்போது இயக்குனர் ஓம்ராவத், கதாநாயகி கீர்த்தி சனோனை திடீரென கட்டி பிடித்து சரமாரியாக முத்தமழை பொழிந்தார். காட் பிளஸ் யூ எனவும் கூறினார். இதேபோன்று இசை அமைப்பாளர் அஜய்அடுலும் நடிகையை கட்டிப்பிடித்து வழி அனுப்பினார். இதை பார்த்த பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் எதிரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதா என கண்டித்தனர். இந்த முத்தக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையறிந்த பாஜகவினரும் கடுமையாக கண்டித்தனர். இதுதொடர்பாக, ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயிலுக்கு வந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்து அதன் புனித தன்மையை காப்பாற்ற வேண்டும்.

ஆனால் ஆதிபுரூஷ் திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ள நடிகையை கோயிலுக்கு வெளியே இயக்குனர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற செய்கைகளை தவிர்க்க வேண்டும். உடனடியாக அவர்கள் வெளிப்படையாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேவஸ்தான அதிகாரிகளும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருப்பதியில் ஏழுமலையான் கோயில் எதிரே நடிகையை கட்டிப்பிடித்து சரமாரி முத்தம் கொடுத்த இயக்குனர்: பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: