வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்தில் தூணில் கட்டி வைத்து நோயாளி அடித்து கொலை: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

* அனுமதி பெறாமல் இயங்கியது அம்பலம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளியை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக மைய உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அனுமதி பெறாமல் 5 ஆண்டுகளாக மறுவாழ்வு மையம் இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் 5 ஆண்டுகளாக தனியார் மது போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இந்த மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த விளாங்காடு ஊராட்சி கரையங்காட்டை சேர்ந்த ெதாழிலாளி முருகேசன்(47) சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று மறுவாழ்வு மையத்தின் அறை பூட்டை உடைத்து முருகேசன் தப்பிக்க முயன்றார். இதை பார்த்த மறுவாழ்வு மைய மேலாளர் வேல்முருகன்(38) மற்றும் பணியாளர்கள் சாம்சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகியோர் சேர்ந்து முருகேசனை பிடித்து அங்குள்ள தூணில் கட்டி வைத்து இரும்பு குழாயில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்து மயங்கிய முருகேசனை சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்து முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கழிவறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த முருகேசனை மருத்துவமனைக்கு தூக்கி வந்ததாக வேதாரண்யம் போலீசில் மறுவாழ்வு மையத்தினர் தெரிவித்தனர். இதைதொடர்ந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு ேபாலீசார் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த நாகை எஸ்பி ஹர்ஷ்சிங், ஏடிஎஸ்பி சுகுமாறன், வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மறுவாழ்வு மையத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், முருகேசன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்ைச பெற்ற 29 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் மறுவாழ்வு மையத்தில் காயமடைந்த நிலையில் இருந்த சரண்ராஜ்(32), பிரபாகரன்(35), பாலமுருகன்(25) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மைய மேலாளர் வேல்முருகன்(38), பணியாளர்கள் ஷ்யாம்சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், 5 ஆண்டுகளாக அரசு அனுமதி பெறாமல் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் நோயாளிக்கு அனுமதி கட்டணமாக ரூ.5 ஆயிரம், மாத கட்டணமாக ரூ.15 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஆனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததும் தெரியவந்தது.

இதற்கிடையே மறுவாழ்வு மையத்துக்கு சென்று ஆர்டிஓ மதியழகன், தாசில்தார் ஜெயசித்ரா விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த 26 பேரில் 17 பேரை வேதாரண்யம் பல்நோக்கு சேவை மையத்துக்கும், 9 பேரை நாகை அரசு மருத்துவமனைக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் மையத்தை பூட்டி சீல் வைத்தனர். வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிந்து மைய உரிமையாளர் மணிகண்டன்(36), வேல்முருகன், ஷாம்சுந்தர், தீபக்குமார் ஆகியோரை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.

இறந்த முருகேசன் உடலை பார்த்த எஸ்பி ஹர்ஷ் சிங் கண்கலங்கியதுடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், மறுவாழ்வு மையத்தில் விசாரணை நடத்தியதில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தொடர் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்தில் தூணில் கட்டி வைத்து நோயாளி அடித்து கொலை: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: