மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்தவர் கீதாபாய். மதுரை மண்டல பாஸ்போர்ட் உதவி அதிகாரி. இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரூ.பல கோடி மதிப்பில் தனது பெயர், கணவர் நரசிம்மபாய் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி முதலீட்டு பத்திரங்களை வாங்கி இருப்பதாக சி.பி.ஐ க்கு புகார் சென்றது. கீதாபாய், நரசிம்மபாயின் நடவடிக்கைகளை சி.பி.ஐ.,யினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து 2010ல் கீதாபாய் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. கீதாபாய், நரசிம்மபாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழல் தொடர்பான ஆவணங்கள், வங்கி முதலீட்டு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் என்.நாகேந்திரன் ஆஜரானார். இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி ஏ.எம். பஷீர்அஹகமது முடிவு செய்தார்.

பின் கீதாபாய், நரசிம்மபாய் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஊழல் வழியில் குவித்த பல கோடி மதிப்புள்ள சொத்துகள், வங்கி முதலீட்டு பத்திரங்களை அரசுடைமையாக்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ கோர்ட் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் கீதாபாய் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் ஆவண, ஆதாரங்கள் உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, சிபிஐ கோர்ட்டின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Related Stories: