பட்டாபிராமில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம்: டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

ஆவடி: பட்டாபிராமில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தை இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் பட்டாபிராம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 1988ம் ஆண்டு முதல் பட்டாபிராம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதேபோல் நெமிலிச்சேரி முதல் சேக்காடு அண்ணாநகர் வரை மற்றும் பட்டாபிராம் முதல் சோரஞ்சேரி வரை எல்லையாக கொண்டு திருநின்றவூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது.

முன்னதாக ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், முத்தாபுதுப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான புகார்களை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசார் விசாரித்து வந்தனர். இதனால் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப நல வழக்குகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகின. இதனால் பெண் போலீசாருக்கு வேலைப்பளு அதிகமாகி, வழக்கை விரைந்து விசாரித்து முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் தொடர் பரிந்துரை பேரில், ஒரு சரகத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

அதன்படி, பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர் குடியிருப்பில் அமைந்துள்ள பழைய கட்டிடத்தை புனரமைத்து, காவல் நிலையத்தை ஒட்டி பகுதியில் புதிதாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில், இன்று காலை புதிதாக அமைக்கப்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி காவல் ஆணையரக ஆணையர் அருண் தலைமை தாங்கினார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று, புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பட்டாபிராமில் இன்று முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு திருநின்றவூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரைந்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறை, சொத்து வைப்பு அறை, நிலை எழுத்தாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கணினி அறை, குழந்தைகளை விசாரணை செய்யும் அறை என கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் ஒரு ஆய்வாளர், 2 சிறப்பு உதவி ஆய்வாளர், முதல்நிலை பென் தலைமை காவலர் மற்றும் இதர போலீசார் பணியாற்றுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், தமிழ்நாட்டில் புதிதாக ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தற்போது புதிதாக 20 மகளிர் காவல் நிலையம் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து இதுவரை 45,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உளவியல்பூர்வமாக பெண்கள் பிரச்னைகளை அணுகுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரில் உள்ள அகில இந்திய மனநல மருத்துவமனையில் நாளை முதல்கட்டமாக பெண்களுக்கான பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்னைகளை சரிசெய்ய 120 மகளிர் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் அறிவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் விசாரணையின் தரம் உயரும். பட்டாபிராமில் தற்போது போதிய இடம் இல்லாத காரணத்தினால் ஆய்வாளர் குடியிருப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. பின்னர் அதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

The post பட்டாபிராமில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம்: டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: