கேரள லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கில் தற்கொலை: சென்னையில் வசித்தவர்கள்

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் கடந்த பல வருடங்களாக சென்னையில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர். இவரது மனைவி சுனி பீட்டர், மகள் ஐரின். சந்தோஷ் பீட்டர் கடந்த பல வருடங்களாக குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்ற அவர், அங்கு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். 7ம் தேதி (நேற்று) இரவு அறையை காலி செய்வதாக ஓட்டல் ஊழியர்களிடம் சந்தோஷ் பீட்டர் கூறியிருந்தார்.

ஆனால் இன்று காலை வரை அவர் காலி செய்யவில்லை. இதைத் தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் அறைக் கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் திருச்சூர் கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது மூன்று பேரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் நடத்திய பரிசோதனையில் சந்தோஷ் பீட்டர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில், தங்களை சிலர் ஏமாற்றி விட்டதாகவும், பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

The post கேரள லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கில் தற்கொலை: சென்னையில் வசித்தவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: