திருவனந்தபுரம்: பெங்களூருவில் இருந்து 54 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் கடத்திய சம்பவத்தில் நடிகர் உள்பட 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினருடன் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் ரயில் பாலக்காடு ஒலவக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது.
இந்த ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை நுண்ணறிவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஒரு பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கில் 54 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த சவுக்கத் அலி மற்றும் பிரணவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சவுக்கத் அலி ஏராளமான ஆல்பங்களில் நடித்துள்ளார்.
பிரணவ் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இருவரும் பெங்களூருவிலிருந்து போதைப் பொருளை வாங்கி கேரளாவில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
The post போதைப் பொருள் கடத்தல்: நடிகர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.