பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அமைச்சர்களை அழைத்துவர விரும்புகிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 18,210 மாணவர்கள் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர மாற்றுத்திறனாளிகள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு பிரிவினர் கீழ் ஒதுக்கீட்டில் சேர 5,024 பேர் விண்ணப்பித்துள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேர அரசுப்பள்ளி மாணவர்கள் 31445 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 2 முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான 70 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்த்து தயாராக உள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அமைச்சர்களை அழைத்துவர வேண்டும் என்று விரும்புகிறார் ஆளுநர். ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்று ஆளுநர் விருப்புவதன் காரணமாகவே தாமதம். கல்லூரி படிப்பை முடித்த 9,29,542 மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் உள்ளனர். கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு இன்னும் பட்டம் வழங்கப்படவில்லை. பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதற்கு ஆளுநரே காரணம்.

சிறப்பு விருந்தினர்களாக வட இந்தியாவில் உள்ளவர்களை அழைக்கவே ஆளுநர் விரும்புகிறார். தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள், முன்னாள் துணைவேந்தர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க ஆளுநர் விரும்புவதில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் துணை வேந்தரை தேடுவதற்கான குழு அமைக்கவில்லை என்ற ஆளுநர் புகாருக்கு பொன்முடி மறுப்பு தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே சட்டப்படியான 3 பேர் குழு அமைக்கப்பட்டு விட்டது. மூவர் குழு அமைக்கப்பட்ட பிறகும் பல்கலைக்கழகம் மானியக்குழு சாரிபில் ஒருவரை நியமிக்க ஆளுநர் நிர்பந்திக்கிறார்.

சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறார். ஆளுநரின் செயல்பாட்டால் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை என்று துணைவேந்தர்கள் முறையிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு விருந்தினர்களை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்தலாம் என ஆளுநர் கூறினால் விரைவில் விழா நடைபெறும். தமிழ்நாட்டில் கல்வித்தரம் சிறப்பாக உள்ளதாக ஒன்றிய அரசின் என்ஐஆர்எப் தரவரிசை பட்டியலில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி இந்தியா அளவில் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 51% -லிருந்து 53% உயர்ந்துள்ளது. கல்வியில் ஆளுநர்தான் அரசியலை புகுத்துவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.

The post பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அமைச்சர்களை அழைத்துவர விரும்புகிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: