‘’நான் முதல்வன்‘’ திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில்

திருவலம், ஜூன் 8: வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் ‘’நான் முதல்வன்’’ திட்டத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 76 அரசு, தனியார் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 2022-2023ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் பல்கலைகழக கணிததுறை கலைஅரங்கில் நடந்தது.

முகாமிற்கு பல்கலைகழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். பல்கலைகழக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு இயக்குநர் யோகானந்தம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் சையத்அலி, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். அப்போது துணைவேந்தர் ஆறுமுகம் பேசுகையில், ‘தமிழ்நாடு முதல்வர் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகளின் கல்வி தரத்தினை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் தங்களது தகுதிகளுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் பங்கேற்று தேர்வு பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையாக இந்த வேலைவாய்ப்பு முகாம் பயன்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை நீங்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு உங்களது தனிதிறமைகளை வெளிகொண்டு வரவேண்டும். மேலும் பல்வேறு பணிகளில் சேர்ந்து முன்னேறி நமது நாட்டிற்கும்,பல்கலைகழகத்திற்கும் பெருமை தேடி தர வேண்டும்’ என பேசினார். இதில் டிவிஎஸ், எல்ஐசி, அசோக் லைலேண்ட், முத்தூட் பின்கார்ப்போன்ற 14 தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் 10 கல்லூரிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post ‘’நான் முதல்வன்‘’ திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: