வீடு இழந்து குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உடனடி தீர்வு ஏடிஎஸ்பி நடவடிக்கை வாராந்திர சிறப்பு குறைதீர்வு முகாமில்

திருவண்ணாமலை, ஜூன் 8: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில், வீடு இழந்து குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன் கிழமையன்று சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் புகார் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத பொதுமக்கள், இக்கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு குறைதீர்வு முகாம் ஏடிஎஸ்பி ஸ்டீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறைதீர்வு கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 20 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி ஸ்டீபன், அந்த மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தினார். மேலும், ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்களில் அளித்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறுவதில் தாமதம் என தெரிவிக்கப்பட்ட மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், செய்யாறு பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் மனு அளித்தார். அதில், கணவரை இழந்த பிறகு, அவரது வீட்டில் இருந்து தன்னையும், குழந்தைகளையும் விரட்டியதால், வீடு இழந்து உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து, உடனடியாக செய்யாறு போலீசார் விசாரணை நடத்தவும், கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் இளம் பெண் வசிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஏடிஎஸ்பி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, செய்யாறு போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, கணவரின் வீட்டில் இளம் பெண் வசிப்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

The post வீடு இழந்து குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உடனடி தீர்வு ஏடிஎஸ்பி நடவடிக்கை வாராந்திர சிறப்பு குறைதீர்வு முகாமில் appeared first on Dinakaran.

Related Stories: