நரிக்குறவர்கள் சாலை மறியல் ஆரணி சமத்துவபுரம் கிராமத்தில் பரபரப்பு தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து

ஆரணி, ஜூன் 8: ஆரணி சமத்துவபுரம் கிராமத்தில் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், சமத்துவபுரம் குடியிருப்பு அருகில் இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் வழங்கப்பட்டு வசித்து வருகின்றனர். அதேபோல், இலங்கை தமிழர்களுக்கும் அரசு வீடு வழங்கப்பட்டு, வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நரிக்குறவர்கள், இருளர்கள் சமத்துவபுரம் குடியிருப்பு வழியாக பஸ்நிறுத்தத்திற்கு வந்து செல்வது வழக்கம். இதனால், சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நரிக்குறவர்கள் அவ்வழியாக வந்துசெல்ல எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், சமத்துவபுரம் அருகில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் குடியிருப்பு பகுதியிலும், சமத்துவபுரம் வழியாக நரிக்குறவர்கள் செல்லும் அந்த வழியிலும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால், நரிக்குறவர்கள் மாற்று வழி செல்ல அதிக தூரம் செல்வதால், தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் நேற்று திடீரென ஆரணி-தேவிகாபுரம் செல்லும் சாலை தச்சூர் கூட்ரோடில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீஸ் எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் மறியல் ஈடுபடுவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்கமறுத்த நரிக்குறவர்கள் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்,அங்கு வந்த ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்மந்தப்பட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நரிக்குறவர்கள் சாலை மறியல் ஆரணி சமத்துவபுரம் கிராமத்தில் பரபரப்பு தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து appeared first on Dinakaran.

Related Stories: