செங்கம், ஜூன் 8: செங்கம் அடுத்த அரிதாரி மங்கலத்தில் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரிதாரி மங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கல் பயிரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் வீடுகள் கட்டியும், விவசாய நிலங்களாக 50க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர்.
குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்றால் வருவாய்த்துறை மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தாசில்தார் முனுசாமி தலைமையில் வருவாய் துறையினர் கல்பயிரி ஏரிக்கு சென்று மாடி வீடு மற்றும் கூரை வீடு உட்பட வீடுகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல ஏற்கனவே விவசாய நிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஏரி கால்வாய் பலப்படுத்தும் பணியிலும் வருவாய் துறையில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் துணை தாசில்தார் தமிழரசி. வருவாய் ஆய்வாளர் சரண்ராஜ். ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் அப்பர் சாமி, நில அளவையர் தனலட்சுமி உட்பட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடைபெற்ற ஈடுபட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தாசில்தார் முனுசாமி தெரிவித்தார்.
The post ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை செங்கம் அடுத்த அரிதாரி மங்கலத்தில் appeared first on Dinakaran.