மக்கள் பிரச்னைகள் குறித்து வாட்ஸப்பில் புகார் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்

நாமக்கல், ஜூன் 8: மக்கள் பிரச்னைகள் குறித்து வாட்ஸப்பில் புகார் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்களுடனான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் நாமக்கல் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் நகராட்சி பகுதியில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அனைத்து பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். நகர்மன்ற உறுப்பினர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும், கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் கொசவம்பட்டி, போதுப்பட்டி என 2 இடங்களில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காலை, மாலை 2 வேளையும் டாக்டர்கள், செவிலியர்கள் அங்கு பணியில் இருப்பார்கள். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், எனக்கு தகவல் தெரிவிக்கலாம். வார்டில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்கள் பிரச்னைகள் குறித்து, எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். இதுவரை எனக்கு வந்த அனைத்து மெசேஜ்களுக்கும், பதில் அனுப்பியுள்ளேன். வாட்ஸ் அப்பில் டைப் செய்ய சிரமமாக இருந்தால், வாய்ஸ் மெசேஜ் மூலம் பிரச்னைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சுகுமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாமக்கல் நகராட்சி, தும்மங்குறிச்சி, பெரியகுளம், கிருஷ்ணாபுரம், காவேட்டிப்பட்டி, போதுப்பட்டி, முல்லைநகர், கொசவம்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹34 லட்சம் மதிப்பீட்டில் தும்மங்குறிச்சி, செம்மண்குளம் மேம்படுத்தும் பணி, ₹65 லட்சத்தில் பெரியூர் குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணி, ₹178 லட்சத்தில் கிருஷ்ணாபுரம் குளத்தை தூர்வாரி கரையினை பலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் நகராட்சி போதுபட்டி, கொசவம்பட்டி நகர்ப்புற நலவாழ்வு மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ வசதிகள், மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணி நேரம் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம், தகவல் பலகை வைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், நாமக்கல் நகராட்சி திட்டக்கழிவு மேலாண்மை உரப்பூங்காவில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ₹7 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் பயோமைனிங் திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலைப்பட்டியில் ₹19.50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

The post மக்கள் பிரச்னைகள் குறித்து வாட்ஸப்பில் புகார் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: