சேலம் மாவட்டத்தில் ₹1.95 கோடியில் 5 உழவர் சந்தைகள் புனரமைப்பு வேளாண் வணிக அதிகாரிகள் தகவல்

சேலம், ஜூன் 8: சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் தம்மம்பட்டி, இளம்பிள்ளை, இடைப்பாடி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட 5 உழவர்சந்தைகள், ₹1.95 கோடியில் புனரமைக்கப்படுகிறது. உழவர்சந்தை என்பது தமிழ்நாடு அரசால் 1999ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வேளாண் பொருட்களை அவர்களே இடைத்தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக உழவர்சந்தைகள் கொண்டு வரப்பட்டது. தற்போது தமிழகத்தில் 183 உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர்சந்தைகளில் தினசரி ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் ெபாருாளதாரம் மேன்மை அடைகிறது.

தினமும் லட்சக்கணக்கான நுகர்வோர், விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். உழவர்சந்தைகள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. காய்கறிகள் பதப்படுத்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அழுகிய, நாள்பட்ட காய்கறிகளை அங்கேயே அழித்து உரமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாலை நேர உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் பல மாவட்டங்களில் உழவர்சந்தைகள் புனரமைப்பு பணிகள் ேமற்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாகிறது.

அதில் மிகவும் பழுதடைந்துள்ள உழவர்சந்தைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள உழவர்சந்தைகளின் பட்டியல்களை வேளாண்மைத்துறை வேளாண் வணிகஅதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுத்தனர். அந்த பட்டியலை அதிகாரிகள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதை பரிசீலித்த அரசு பழுதடைந்துள்ள உழவர்சந்தைகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வேளாண் வணிகம் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர்சந்தைகளில் வழக்கமான நாட்களில் நடக்கும் வியாபாரத்தைவிட, அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மிகவும் பழுதடைந்துள்ள உழவர்சந்தைகளின் பட்டியலை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

அதில் தமிழகத்தில் 25உழவர்சந்தைகளை புனரமைப்பதற்காக ₹8 கோடியே 18 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் உழவர்சந்தைகளில் அலுவலக அறை, கழிவறைகள் அமைத்தல், புதுப்பித்தல், குடிநீர்வசதி, பாதுகாப்பு சுவர், எலக்ட்ரானிக் எடை வசதி, வடிகால் புனரமைப்பு, கூரை பழுதுபார்ப்பு, நடைப்பாதைகள் அமைத்தல், வண்ணம் பூசுதல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மாநில வேளாண் விற்பனை வாரியம் வாயிலாக இப்பணிகள் நடக்கவுள்ளது.அந்த வகையில், கோவையில் 4 உழவர்சந்தை, ஈரோட்டில் ஒன்று, நாமக்கல்லில் ஒன்று, திருவண்ணாமலையில் 2 உழவர்சந்தை, வேலூரில் ஒரு உழவர்சந்தை என புனரமைப்பு பணி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, இடைப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் ஆகிய உழவர்சந்தைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் இடைப்பாடி உழவர்சந்தையில் 20 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அங்கு 20 பேர் மட்டுமே கடைகள் அமைக்க இடவசதி உள்ளது. மேலும் அங்கு சுற்றுச்சுவர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. அங்கு 40 முதல் 45 கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மேற்கூரை தரமாகவும், சுற்றுச்சுவர், கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்படும்.இதேபோல் அஸ்தம்பட்டி உழவர்சந்தையில் கழிப்பறை வசதி மேற்கொள்ளப்படும்.

மேலும் கடைகள் அமைவிடம் பழுது பார்க்கப்படும். இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட உழவர்சந்தைகளிலும் அலுவலக அறை, கழிவறை அமைப்பது, குடிநீர் வசதி, வண்ணம் பூசுதல், நடைப்பாதைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ஜலகண்டாபுரம் உழவர்சந்தை ₹38 லட்சத்து 60 ஆயிரமும், தம்மம்பட்டி உழவர்சந்தை ₹47 லட்சமும், இளம்பிள்ளை உழவர்சந்தை ₹62 லட்சமும், இடைப்பாடி உழவர்சந்தை ₹43 லட்சமும், அஸ்தம்பட்டி உழவர்சந்தை ₹4 லட்சம் சேர்த்து மொத்தம் ₹1 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான நிதி வந்தவுடன் புனரமைப்பு பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post சேலம் மாவட்டத்தில் ₹1.95 கோடியில் 5 உழவர் சந்தைகள் புனரமைப்பு வேளாண் வணிக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: