முத்துநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஓமலூர், ஜூன் 8: ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓமலூர் தாலுகா, பச்சனம்பட்டி ஊராட்சி முத்துநாயக்கன்ப்பட்டி பழையூர் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. கடந்த 19ம் தேதி திரௌபதி அம்மன் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ம் தேதி சுவாமி அழைப்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து திரௌபதி அம்மனின் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவான் சிரசு பொருத்துதல், சக்தி அளித்தல், அர்ஜூனன் தபசு, அரவான் களபலி, மாடுபுடி சண்டை, கோட்டை இடித்தல், துரியோதனன் படுகளம், திரௌபதி சபதம் முடித்த பின்னர் திரௌபதி அம்மனை பக்தர்கள் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.சுற்றுவட்டார கிராம மக்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி குண்டத்தில் வீர கம்பம் நட்டு, தீ மிதி திருவிழா துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் ஊர்வலமாக செல்ல, அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர். திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி, ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post முத்துநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: