நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவையில் முடிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 10.35 சதவீதம் வரை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.143 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் ரூ.2,183 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 2023-24ம் ஆண்டிற்கான காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.3 சதவீதம் முதல் 10.35 சதவீதம் வரையிலும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் காரீப் பயிர்கள் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.128 முதல் ரூ.805 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியதாவது: 2023-24ம் பயிர் ஆண்டில் பயிரிடப்படும் மற்றும் காரீப் சந்தைப்படுத்துதல் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கொள்முதல் செய்யப்படும் அனைத்து முக்கிய காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் சரிவடைந்து வரும் நிலையில் குறைந்த ஆதரவு விலை உயர்வு மூலம் விவசாயிகள் பலன் அடைவார்கள். காரீப் தானியங்களில் முக்கியமான பொது ரக நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம், அதாவது குவிண்டாலுக்கு ரூ.143 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல் குவிண்டால் விலை ரூ.2,040ல் இருந்து ரூ.2,183 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல, ஏ ரக நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2060ல் இருந்து ரூ.2,203 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலப்பின சோளம் மற்றும் மல்தாண்டி சோளத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையே 7 மற்றும் 7.85 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலப்பின சோளம் குவிண்டால் ரூ.2,970ல் இருந்து ரூ.3,180 ஆகவும், மல்தாண்டி சோளம் குவிண்டால் ரூ.2,990ல் இருந்து ரூ.3,225 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் குவி ண்டாலுக்கு ரூ.128ம், துவரம்பருப்பு ரூ.400ம், பச்சைப் பயறு ரூ.803ம், உளுந்து ரூ.350ம், நிலக்கடலை ரூ.527ம், சூரியகாந்தி விதை ரூ.360ம், சோயாபீன் ரூ.300ம், எள் ரூ.805ம், நைஜர் விதை ரூ.447ம், பருத்தி ரூ.540ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையையும், பயிர் பல்வகைப்படுத்துதலையும் ஊக்குவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* 10 ஆண்டில் 2வது அதிகம்
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வானது (ரூ.143), கடந்த 10 ஆண்டில் 2வது அதிகபட்சமாகும். முன்னதாக கடந்த 2018-19ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஒடிசா விபத்துக்கு இரங்கல்
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியான 98 பேருக்கும், ஒடிசா ரயில் விபத்தில் பலியான 288 பேருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பிஎஸ்என்எல்லுக்கு ரூ.89,047 கோடி நிதி
* ஒன்றிய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ மீட்டெடுக்க மூன்றாவது முறையாக ரூ.89,047 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நிதியில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஈக்விட்டி இன்ப்யூஷன் மூலம் 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதும் அடங்கும்.
* குருகிராமில் ஹூடா சிட்டி சென்டரிலிருந்து சைபர் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 28.50 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 27 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவு ரூ.5,452 கோடி என்றும், திட்டத்தை 4 ஆண்டுகளில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

The post நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவையில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: