மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரிப்பு: தொடரும் வன்முறையால் பதற்றம்

கொல்கத்தா: மணிப்பூரில் ஆம்புலன்சில் சென்ற 8 வயது சிறுவன், அவனது தாய் உள்பட 3 பேர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க சிறுபான்மையாக வசிக்கும் நாகா, குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மே 3ம் தேதி இருசமூகத்தினரும் நடத்திய பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 98 பேர் பலியானதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இருசமூக மக்களும் 272 வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குக்கியின மக்கள் தங்கியுள்ள முகாம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டோன்சிங் ஹேங்சிங்(8) என்ற சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. உடனே அவனது தாய் மீனா ஹேங்சிங்(45) சிறுவனை ஆம்புலன்சில் மேற்கு இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்களின் உறவுக்கார பெண் லிடியா லூரம்பம்(37) என்பவரும் ஆம்புலன்சில் சென்றுள்ளார். காவல்துறை பாதுகாப்புடன் சென்ற ஆம்புலன்சை ஐசோசெம்போ என்ற இடத்தில் வழி மறித்த சுமார் 2,000 பேர் கொண்ட கும்பல் ஆம்புலன்சுக்கு தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்தில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நீடிக்கிறது.

அமித் ஷா வீடு முன் போராட்டம்
இதனிடையே குக்கி இன மக்களை காப்பாற்ற கோரி குக்கி இனபெண்கள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் சிறுபான்மையாக உள்ள குக்கி மக்களை காப்பாற்ற வேண்டும், அமைதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு குக்கி பெண்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரிப்பு: தொடரும் வன்முறையால் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: