தடை செய்த இயக்கத்துக்கு பண பரிவர்த்தனை? காரைக்குடியில் 2 வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: சிங்கப்பூரில் பணியாற்றியவரை பிடித்து விசாரணை

காரைக்குடி: காரைக்குடியில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு பணம் அனுப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் 2 வீடுகளில் சோதனை நடத்தி ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (43). இவர் சிங்கப்பூரில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தரக்கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு பண பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிங்கப்பூரில் இருந்த சாகுல் ஹமீதின் பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு என்ஐஏ பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று டெல்லி மற்றும் மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 பேர் இணை இயக்குநர் ஹேட்டா ராம் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து, சாகுல் ஹமீது மற்றும் அவரது மாமனார் முகமது அலி ஜின்னா(75) ஆகியோர் வீடுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சோதனை நடத்தினர். இதில் செல்போன், ஏடிஎம் கார்டு உள்பட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சாகுல் ஹமீதை மதுரை அமலாக்க துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அவரது மாமனார் முகமது அலி ஜின்னாவிடம் இன்று மதுரைக்கு விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறி சம்மன் வழங்கி சென்றுள்ளனர்.

* கோவையில் இருவர் வீடுகளில் ரெய்டு
கோவை கரும்புக்கடை, பாரத் நகரை சேர்ந்த ஒசாமா என்கிற சுலைமான், சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 2 பேரின் வீடுகளில் நேற்று காலை சிறப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் கோவை மாநகர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரம் சோதனை நடந்தது. இதில், இருவரது செல்போன்களும், சில ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் 2 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடுவதால் இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தடை செய்த இயக்கத்துக்கு பண பரிவர்த்தனை? காரைக்குடியில் 2 வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: சிங்கப்பூரில் பணியாற்றியவரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: