ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான தேர்தல்; இந்தியாவை காப்பாற்ற பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

சென்னை: பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 95 வயது வரை வாழ்ந்த கலைஞர் மேலும் 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று விழா நாயகனாக இருந்திருப்பார்.

கலைஞரின் ஆசியை தொடர்ந்து பெற்றுக் கொண்டே என்னுடைய ஆட்சியை நடத்தி வருகிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்; ஏழைகள் நலம் பெறும் ஆட்சியை நடத்தியவர் கலைஞர். திமுகவின் ஆட்சியே ஏழை, எளிய பாட்டாளிகள் பயன் பெறும் ஆட்சியாகத்தான் இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு ஜூன் 3 வரை கொண்டாட உள்ளோம். இந்தியாவில் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவது திராவிட மாடல் ஆட்சிதான். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் உள்ளடக்கம். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள், கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்க்கிறார்கள். ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும். முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது. தேர்தலில் வெற்றி பெற எத்தகைய பொய்களையும் சொல்ல பாஜக தயங்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதை தீர்மானிப்பதாக அமைய வேண்டும். சாதி, மதத்தால் பாஜக பிரிவினையை ஏற்படுத்த முயலும், பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

வரும் 23-ம் தேதி பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, பாஜகவை வீழ்த்துவது பற்றி ஆலோசிக்க உள்ளோம். எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற தமிழ்நாட்டைப் போன்று ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும். மதவாத, பாசிசவாத, எதேச்சதிகார பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும், சாதி, மதத்தால் பிரிவினையை விதைக்க வந்த கட்சி பாஜக. விழிப்புடன் இருந்து நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒன்றுசேர்ந்து அனைவரும் போராடி வெற்றி பெறுவோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஆகஸ்ட் 7ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நினைவகம் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

The post ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான தேர்தல்; இந்தியாவை காப்பாற்ற பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..! appeared first on Dinakaran.

Related Stories: