கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி வடசென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி வடசென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு கலைஞருக்கு 100வது பிறந்தநாளாகும். அதன்படி, நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல கலைஞரின் பிறந்த தினமான கடந்த 3ம் தேதி நுற்றாண்டு தொடக்க விழாவிற்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட வடசென்னை புளியந்தோப்பில் நடைபெறவிருந்த நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த பொதுக் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, பொன்முடி, ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சித் தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கான மேடை ‘‘ராஜா தர்பார்’’ போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மலை மீது சூரியன் உதிப்பது போலவும், அதில் ஒரு பக்கம் கலைஞர் மற்றொரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் தெரிவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ஆயிரம் வாழை மரங்கள், 100 அடியில் பிரமாண்ட கொடிக்கம்பம், கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை குறிக்கும் வகையில் அவரது பிரமாண்ட கட்அவுட்களும் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதுக் கூட்டத்தை காண்பதற்கு சென்னை காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வர இருப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை சுற்றி காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி வடசென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: