ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரம்

*ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணைக்கு, பல்வேறு வழிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், அணைக்கு தண்ணீர் கட்டு கடங்காமல் வரத்து இருக்கும் போது, மலை முகடுகளில் இருந்து பாறைகள், கற்கள், மண், மரத்துண்டுகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு, அணையில் ஆங்காங்கே தேங்கி கொள்கிறது.

1962ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையில், சுமார் 50 சதவீதம் வண்டல் மண் படர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக, அணையின் பெரும்பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால், தண்ணீரை அதிகளவு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இதன் காரணமாக, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்போது, தண்ணீரின் அளவு குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, ஆழியார் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில், அணை நீர்மட்டம் சரியும் நேரத்தில், அணையின் ஒரு பகுதியில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
அதேபோல் இந்த ஆண்டில், ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள், இலவசமாக வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதுடன், உடனே அனுமதி அளிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் உத்தரவை அடுத்து, விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை லாரிகள் மூலம் இலவசமாக எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
தினமும் சராசரியாக 200 லாரி என, ஒவ்வொரு லாரியில் அதன் அளவை பொறுத்து மூன்று மற்றும் நான்கு யூனிட் வண்டல் மண் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அணையின் ஒரு பகுதி ஆங்காங்கே லாரிகளை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக கனரக வாகங்களில் வண்டல் மண் எடுத்து செல்லப்பட்டன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழையில்லாமல் இருந்தாலும், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை, இன்றும் ஒரு வாரத்திற்குள் எடுத்து செல்ல கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘ஆழியார் அணையில் இருந்து கடந்த ஒன்றரை மாதமாக, வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. அணையின் கீழ்மேல் பகுதியில் வண்டல் மண் எடுத்து செல்ல ஏதுவாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இறுதி வரை விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண்ணை, விவசாயிகள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், மழை இல்லாததால், வண்டல் மண் எடுக்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பருவமழை எந்நேரத்திலும் பெய்யலாம் என்பதால், விவசாயிகள் விரைந்து மண்டல் மண் எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, ஆழியார் அணையில் வண்டல் மண் எடுக்க, இன்னும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்கள் விவசாய விளை நிலத்துக்கு தேவையான வண்டல் மண் எடுத்து கொள்ளலாம்’ என்றனர்.

The post ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: