பேராவூரணி கடைவீதியில் ரசாயனம் தடவி பழுக்கவைத்த 121 கிலோ மாம்பழம் பறிமுதல்-அதிகாரிகள் திடீர்

பேராவூரணி : பேராவூரணி கடைவீதி பழக்கடைகளில் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.பேராவூரணி பழக்கடைகளில், பொதுமக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டதன் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா உத்தரவின் பேரில், பேராவூரணி பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த ரசாயனம் தடவி பழுக்க வைத்த வாழைப்பழங்கள், மாம்பழங்கள், கெட்டுப்போன பழங்கள் சுமார் 121 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக ஐந்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது, ரசாயனம் தடவிய பழங்கள் அதிக அளவில் பேராவூரணி பகுதி பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் பேராவூரணி சுற்றுவட்டார பகுதி, பழக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 121 கிலோ பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. ஐந்து கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பழரசம் விற்பனை கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரசாயனம் தடவிய பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். எனவே இது சட்ட விரோதம் என பழக்கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உணவுப்பொருள் விற்கும் பல கடைகளில் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் உள்ளது. இவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலோ, கணினி சேவை மையங்களிலோ ஆன்லைனில் பதிவு செய்து உரிமம் மற்றும் பதிவு பெற்று, பின்னரே உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதில் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

The post பேராவூரணி கடைவீதியில் ரசாயனம் தடவி பழுக்கவைத்த 121 கிலோ மாம்பழம் பறிமுதல்-அதிகாரிகள் திடீர் appeared first on Dinakaran.

Related Stories: