அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதி மாணவி பலாத்காரம் செய்து கொலை: நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்கார கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளியான விடுதியின் சலவை தொழிலாளி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையின் அகோலா பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியின் 5 மாடி விடுதியில் 50 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர். மற்றவர்கள் விடுமுறைக்காக அவரவர் ஊருக்கு சென்றுவிட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த பிரகாஷ் கனோஜியா (35) என்பவர் விடுதியின் சலவைத் தொழிலாளியாக இருந்து வந்தார். அவர் உட்பட மூன்று காவலர்கள் உள்ளனர். விடுதியின் தண்ணீர் டேங்க் அறையின் சாவியை கனோஜியா வைத்திருந்தார். இந்த நிலையில் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கை பார்ப்பதற்காக சம்பவம் நடந்த அதிகாலை சலவை தொழிலாளி பிரகாஷ் கனோஜியா சென்றார். அப்போது நான்காவது மாடியில் தனியாக இருந்த 18 வயது மாணவியை பார்த்தவுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டார். அதற்காக மாணவியின் அறைக்குள் புகுந்து, அவரை பலாத்காரம் செய்ய முற்பட்டார்.

அந்த மாணவி எவ்வளவோ தடுத்து ஓட முயற்சித்தும், அவரை பலமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அன்று மாலை சார்னி ரோடு ஸ்டேஷன் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரவின் முண்டே கூறுகையில், ‘விடுதியின் அறையில் நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை, சம்பவம் நடந்த காலையில் விடுதி பொறுப்பாளர் பார்த்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி, விடுதியின் அறைக்குள் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. விடுதியின் தரைத்தளத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சலவை தொழிலாளி பிரகாஷ் கனோஜியா, தனது துணி மூட்டையை பாதுகாப்பு அறைக்கு அருகே விட்டுவிட்டு அதிகாலை 4.55 மணிக்கு வெளியேறுவது பதிவாகியுள்ளது. அதனால் அவர்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவம் நடந்த நாளின் மாலையில் சார்னி ரோடு ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்த போது, அது பிரகாஷ் கனோஜியா என்பது உறுதி செய்யப்பட்டது. மாணவி பலாத்கார கொலை, அடுத்த சில மணி நேரங்களின் குற்றவாளியான சலவை தொழிலாளி தற்கொலை என்று அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதி மாணவி பலாத்காரம் செய்து கொலை: நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: