மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் பலி

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மணிப்பூரில் 90க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய கலவரம் குறித்து விசாரணை நடத்த கவுகாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர்தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட 3 பேர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் மே 3ம் தேதியும், அதன் பிறகும் நடந்த கலவரங்களுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை விசாரிக்கும். இந்த விசாரணை ஆணையம் விரைவில் ஒன்றிய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே குகி பயங்கரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது.

மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தனர். இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: