புதர் மண்டி பூட்டி கிடக்கும் பொது கழிப்பிட கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வேலூர் சதுப்பேரியில்

வேலூர், ஜூன் 7: வேலூர் சதுப்பேரியில் புதர் மண்டி பூட்டியே கிடக்கும் பொது கழிப்பிட கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56வது வார்டில் உள்ள கொணவட்டம் தேவி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைநிரப்பு நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2014-15ம் ஆண்டில் ₹19 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் திறந்த சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் அப்படியே கைவிடப்பட்டது. இதனால் பூட்டியே உள்ளது. தற்போது புதர் மண்டி செடி, கொடிகளுடன் கழிப்பிடம் காட்சி அளிக்கிறது. பல லட்சம் செலவு செய்து கட்டிய கட்டிடம் பாழாகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தான் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதை முறையாக பராமரிக்க ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கழிப்பிடம் சில மாதங்களில் மூடப்பட்டது. அதை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post புதர் மண்டி பூட்டி கிடக்கும் பொது கழிப்பிட கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வேலூர் சதுப்பேரியில் appeared first on Dinakaran.

Related Stories: