₹1.75 கோடியில் 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்

நாமக்கல், ஜூன் 7: நாமக்கல் மாவட்டத்தில் ₹1.75 கோடியில் 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு அனைத்து மருத்துவ சேவைகளும் உரிய நேரத்தில் தரமான வகையில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் ₹125 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதற்கட்டமாக தலா ₹25லட்சம் வீதம் என மொத்தம் ₹1.75 கோடியில், 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

ராசிபுரம் நகராட்சியில் காந்தி சாலை நகர்ப்புற நலவாழ்வு மையம், நாமக்கல் நகராட்சியில் கொசவம்பட்டி, போதுப்பட்டி ஆகிய 2 மையங்கள், திருச்செங்கோட்டில் நெசவாளர் காலனி, சாலப்பாளையம் ஆகிய 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், குமாரபாளையத்தில் ஜே.கே.கே.சுந்தரம் காலனி, மேற்கு காலனி ஆகிய இரண்டு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் வீதம் பணியமர்த்தப்பட்டு, தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்பட உள்ளது. இங்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குதல், ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் 14 வகையான பரிசோதனைகள் செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகர்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். நிகழ்ச்சியில், எம்பி சின்ராஜ், கலெக்டர் உமா, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ரங்கசாமி, நகராட்சி தலைவர் கவிதாசங்கர், துணைத்தலைவர் கோமதி ஆனந்தன், துணை இயக்குநர் பூங்கொடி, நகர் மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி, போதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ₹50லட்சத்தில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, தெற்கு நகர செயலாளர் ராணா.ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, லீலாவதி சேகர், தனசேகர், விஜய் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், பொறியாளர் சுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், மருத்துவர்கள் அரவிந்தன், பிரியங்கா, புவனேஸ்வரி, தனுப்ரியா, திவ்யா, சதீஸ்குமார், தொண்டரணி இளங்கோ மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post ₹1.75 கோடியில் 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் appeared first on Dinakaran.

Related Stories: