சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பால் குளிரூட்டும் நிலையத்திற்கு ‘சீல்’

சேலம், ஜூன் 7: சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 3 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 814 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 4.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, சேலம் ஆவின் கட்டுப்பாட்டில் உள்ள பால் சேகரிப்பு குழுக்கள் வாயிலாக 814 பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பால் கொள்முதல் மேற்கொண்டு வரும் நிலையில், சில தனியார் நிறுவனங்கள், நபர்கள், தேவையான எவ்வித உரிமமும் இன்றி பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பால் கொள்முதல் செய்து வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு பால் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இச்செயல்பாட்டால் பால் கொள்முதல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையில், சேலம் ஆவின் நிர்வாகம் சட்ட விரோதமாக செயல்படும் பால் குளிரூட்டும் நிலையங்களை கண்காணிக்க 5 குழுக்களை நியமித்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு பால் கொள்முதல், குளிர்விப்பு செய்யும் தனியார் நிறுவனம், நபர்களின் செயல்பாடுகள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ததில், 22 தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக பால் குளிரூட்டும் நிலையங்களை நடத்தி வருவது கண்டறியப்பட்டு, அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிமுறையை மீறி செயல்பட்ட 3 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், சட்ட விரோத பால் குளிரூட்டும் நிலையங்களை கண்காணித்து வருகிறோம். உரிய அனுமதி பெறாமல் இயங்கும் பால் குளிரூட்டும் நிலையங்கள் குறித்து பொது மக்கள் அரசு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். அனுமதியில்லாமல் இயங்கும் பால் குளிரூட்டும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது 3 நிறுவனங்களுக்கு அாிகாரிகள் சீல் வைத்துள்ளனர், என்றனர்.

The post சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பால் குளிரூட்டும் நிலையத்திற்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Related Stories: