வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 உறுதி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில அரசு பஸ்களில் ஜூன் 11 முதல் மகளிர் இலவசமாக பயணிக்கலாம். இந்நிலையில் 200 யூனிட் இலவச மின்சாரம் ஜூலை 1 முதல் அமலக்கு வருகிறது. இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘கர்நாடக மாநிலத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதன்படி வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும். ஆனால் வணிக பயன்பாட்டு மீட்டருக்கு இது பொருந்தாது. மின்கட்டண உயர்வு மற்றும் பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெறுதலை கண்டித்து பாஜ போராட்டம் நடத்துவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

பாஜ ஆட்சியில் இருந்த போது 10 மணி நேரம் இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, நீர்ப்பாசனத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி செலவழித்தல் போன்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பாஜ மக்கள் விரோத கட்சி. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது லஞ்சம், கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்துக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். இவர்கள் காங்கிரசுக்கு அறிவுரை கூறுகிறார்கள் என்பது குறித்து என்ன சொல்வது’ என்றார்.

The post வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: