சட்டவிரோத மது விற்பனையை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த மே மாதம், தஞ்சாவூரில் சட்ட விரோத பார் ஒன்றில் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் மது அருந்திய இரு மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் சயனைடு அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் சயனைடு உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவரது உடற்கூராய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த வலியுறுத்தி இருந்தேன். 3 நாட்களுக்கு முன்பு மதுரை, மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார்.

இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உள்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் பெயின்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தண்ணீருக்கு பதில் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரிப்பதாக தெரிகிறது. சட்ட விரோத பார்கள் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும், சட்ட விரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை காவல் துறை ஆய்வு செய்து உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளிலும் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, கலால் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து உறுதி செய்ய வேண்டும். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சட்டவிரோத மது விற்பனையை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: