ஊட்டியில் காற்று வாங்க சென்று விட்டு எதிர்க்கட்சியைப்போல் ஆளுநர் அரசியல் பேசிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்: வெயிலுக்கு ஊட்டியில் காற்று வாங்க சென்ற ஆளுநர், எதிர்க்கட்சியைப்போல் அரசியல் பேசிக்கொண்டிருப்பது வருந்தத்தக்க செயலாகும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி, சுகாதாரத்துறையை இரண்டு கண்கள் என்றுசொல்லி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆரம்பக்கல்விக்காக இல்லம் தேடி கல்வித் திட்டம். உயர்க்கல்வியில், நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிவித்து மாணவர்களுக்கு படிக்கிற போதே வேலை செய்கிற பயிற்சி கொடுக்க ஆணையிட்டுள்ள ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ‘நான் முதல்வன் திட்டத்தை’ பாராட்டி பேசியிருக்கிறார்.

உயர்கல்வி, எண்ணிக்கையில் வளர்ந்திருப்பது தமிழகத்தில்தான். இதுவெல்லாம் கவர்னர் ரவிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் பேப்பரையாவது அவர் படிக்கவேண்டும். அரசியல்வாதியைப் போல், எதிர்க்கட்சியைப்போல பேசிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. ஊட்டிக்கு காற்றுவாங்க போனவர், தனியாக சென்றிருக்கலாம். துணைவேந்தர்கள் கருத்தரங்கம் என்று அழைத்து அரசியல் பேசுவதற்காக பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறியிருக்கும் புள்ளி விவரங்கள் வெளியிட்டதை அனைவரும் பார்த்துள்ளனர். தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. 2021ல் 32வது இடத்திலிருந்த அண்ணா பல்லைக்கழகம் 13வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இணைவேந்தராக இருக்கிற என்னை அழைக்கவில்லை. கல்வித்துறையில் அரசியலை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேசியமொழியான ஆங்கிலத்தைகூட ஆளுநர் அவமதித்து பேசியிருக்கிறார். அவர் இருக்கிற பீகார் மாநிலத்திற்கு சென்று கல்வித் தரம் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பாஜவை ஏற்றுக் கொள்வதற்கு யாருமே கிடையாது. கட்சியை எப்படியாவது ஆளுநர் மூலமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மோடியைப்போலத்தான் தமிழக முதல்வரும் வெளிநாட்டுக்கு சென்று வந்திருக்கிறார். பல ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டது. கலைஞர் ஆட்சியில், ஒன்றிய அமைச்சராக முரசொலிமாறன் இருந்தபோதுதான் முதன்முதலில் டைடல்பார்க் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்துதான் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அதிகளவில் கொண்டு வரப்பட்டு வளர்ந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி ஒன்றில் புள்ளி விவரம் எடுத்தார்கள். அதில் 73சதவீதம் அரசியலுக்காகத்தான் செய்கிறார்கள் என்று மக்களே தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆளுநர் ஊட்டிக்கு சென்றதால்தான் சென்னையில் மழை பெய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஊட்டியில் காற்று வாங்க சென்று விட்டு எதிர்க்கட்சியைப்போல் ஆளுநர் அரசியல் பேசிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: